திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள், அதிலிருந்த 30 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ ) அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலில் மூன்றாவது குற்றவாளியான பைசல் ஃபரீத் இருப்பிடத்தைக் கண்டறிய ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைசல் ஃபரீத் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தடுக்கப்படும்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், இந்தக் கடத்தல் தொடர்பாக பல்வேறு முக்கியப் புள்ளிகளும் கைதாவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 42 சுங்கத் துறை அலுவலர்கள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் ஆறு கண்காணிப்பாளர்கள், இரண்டு ஆய்வாளர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மேற்கொள்ளப்பட்டுள்ள, இந்தப் பணியிட மாற்ற உத்தரவு கேரள அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுவடைந்த நிலையில், இந்தப் பணியிட மாற்ற உத்தரவு, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அரசியலைவிட்டே விலகிய முன்னாள் கால்பந்து வீரர்!