நீலகிரியின் உயிர்ச் சூழல் காப்பகமாக உள்ளது வயநாடு. வயநாடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பலத்த மழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக குழகபாறை, மேற்பாடி, முட்டியங்காடு மற்றும் குத்துமலை பகுதிகளில் மழையானது கொட்டி அதிகளவில் இருக்கிறது.
இதனால் இந்த பகுதிகளில் வாழும் பெரும்பாலானவர்களின் வீடுகள் இடிந்து, வெகு தொலைவிற்கு இழுத்து வரப்பட்டு தரைமட்டமாகின. வீடுகள் மட்டுமின்றி கோயில், பள்ளிகள், பள்ளிவாசல்கள் இடிந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மலைகளிலிருந்து ஆறு போல மழைநீர் ஆர்ப்பரித்து வருவதால், பல பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் காணாமல் போயுள்ளனர்.
புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம் குத்துமலையிலிருந்து 10பேரின் உடல்களும், முட்டியங்கியிலிருந்து இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இன்னும் பல பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை, உணவுப் பொருட்கள், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
காலநிலை மாற்றத்தால் இதுபோன்று மழை பெய்து வருகிறது என கூறப்பட்டாலும், மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகளை அழித்த காரணத்தாலேயே இந்த கோரச் சம்பவம் நிகழ்கிறது எனச் சூழலியல் ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.