கேரள மாநிலம் கன்னூர் பகுதியில் அமைந்துள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷிஃபா எம் முகம்மது. இவருக்கு கடந்த (மார்ச்) 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கோவிட்19 வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணத்தைத் தள்ளிவைத்தனர்.
இதுகுறித்து ஷிஃபா கூறுகையில், “நிச்சயமாக எனது திருமணம் தள்ளி வைக்கப்பட்டதில் எந்த மன வருத்தமும் எனக்கு இல்லை” என்றார்.
மேலும், “நான் நினைக்கிறேன் திருமணத்தை நிறுத்தி வைக்க முடியும். எங்களால் காத்திருக்க முடியும். ஆனால் இந்த உயிர்க்கொல்லி வைரசிடமிருந்து தங்களுடைய உயிரைக் காக்க போராடும் நோயாளிகளால் காத்திருக்க முடியாது. இந்த முடிவை எனது வருங்காலக் கணவர் அனஸ் முஹம்மதுவும் முழுமையாக ஆதரிக்கிறார். அவர் தற்போது துபாயில் தொழிலதிபராக உள்ளார்” என்றார்.
ஷிஃபாவின் அர்ப்பணிப்பு மருத்துவ சேவை அவரது குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது. கேரளத்தில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பரியாரம் மருத்துவக் கல்லூரி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் நிறைந்துள்ளனர். இதற்கிடையில், கேரளாவில் சனிக்கிழமை கணக்கெடுப்பின்படி 295 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புகளுடன் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: கோவாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவல் இல்லை!