கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு,குறு தொழில் நிறுவனங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வேலையிழந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வேலைவாய்ப்புக்கென பிரத்யேக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மாநிலத்தின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் ஆகியோர் கைகோக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாகக் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த கெஜ்ரிவால், ”கரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் வேலை மற்றும் தொழில்களை இழந்திருக்கும் நிலையில், Jobs.delhi.gov.in என்ற வலைதளம், வேலைக்காக ஆள் தேடுபவர்களுக்கு ஒரு ரோஸ் கர் பஜாராக செயல்படும்.
வேலை தேடும் அதிகளவிலான ஆள்கள் இருந்தபோதிலும், வர்த்தகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோருக்கு தங்களது பணிக்குத் தகுதியான நபர்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நடைமுறைச் சிக்கலை, இந்த வலைதளம் பூர்த்தி செய்யும். ஊரடங்கின்போது, டெல்லியை விட்டு வெளியேறிய குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்” என்றார்.