பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடத்தில் அந்தணர்கள் (பிராமணர்கள்) குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக அந்தணர்கள் வளர்ச்சி (அபிவிருத்தி) வாரியம் ஆட்சேபம் தெரிவித்தது.
இதனையடுத்து ஆட்சேபத்துக்குரிய அந்தக் கருத்துகள் நீக்கப்படும் எனத் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் உயர் அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடத்தில் இது தொடர்பான உள்ளடக்கங்களை ஆராய ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழு 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுரேஷ் குமார் இதனை பேஸ்புக் பதிவாகவும் தெரிவித்துள்ளார். அதில், “அந்தணர்கள் வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினர்கள் என்னிடம் இதுதொடர்பாக புகார் தெரிவித்தனர்.
சம்மந்தப்பட்ட கருத்துகள் அந்தணர்களை அவமதிக்கிறது என்று கூறினார்கள். கடந்த கால தவறுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.