கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. வைரஸ் பரவலின் தீவிரத்தைப் பொருத்து, குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கரேனாவால் அதிகளவில் பாதிக்கப்படாத புதுச்சேரி மாநிலம் ஊழியர்களிடையே தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியார்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது,
"கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும். முதலில், கரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கும், மணல், சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற கட்டுமானப் பொருட்களுக்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்காது. கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோரில் 33 விழுக்காட்டினர் மட்டுமே அலுவலகம் சென்று வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்காது. ஆனால் மதுபான விற்பனைக்கு மே 3 வரை கட்டுப்பாடுகள் தொடரும்" என்றார்.
இதையும் பார்க்க: கோவிட் 19: உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் நிலை..
.