கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு, முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா எதிரொலி: மூடப்பட்ட கர்நாடக முதலமைச்சர் அலுவலகம்! - பி எஸ் எடியுரப்பா
அலுவலக ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பாவின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சுத்திகரிப்பு செய்வதற்காக மூடப்பட்டது.
இதுகுறித்து வெளிவந்த தகவலின் அடிப்படையில், 'முதலமைச்சர் எடியூரப்பாவின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர், தனது கணவருக்கு வைரஸ் தொற்று மேற்கொண்டதன் காரணமாக இரண்டு நாள் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து சோதனை முடிவில் அப்பெண்ணின் கணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அப்பெண்ணிற்கு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
இருப்பினும் அப்பெண் அலுவலகத்தில் பணியாற்றிய காரணத்தால், அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த மூடப்பட்டது' என்று தெரியவந்துள்ளது.