கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீநிவாஸ்மூர்த்தி (57). இவர் தான் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு உயிரிழந்த தனது மனைவி மாதவியின் உருவம் கொண்ட சிலிக்கான் சிலையை நிறுவியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இவரின் புதிய வீட்டிற்கு வருகை புரிந்த உறவினர்கள் உயிரோடு இருப்பதை போன்ற மாதவியின் சிலையைக் கண்டு வாயடைத்துப்போயினர்.
பிங்க் நிற புடவையில் உயிருள்ள ஒரு பெண் இருப்பதைப் போன்று இருக்கும் சிலை தங்களுக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்ததாக ஸ்ரீநிவாஸின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "என் மனைவியின் ஞாபகமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.அந்த அன்பே இவ்வாறு சிலையாக உருப்பெற்றது"என்றார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாதவி தனது இரு மகள்களுடன் திருப்பதி சென்றபோது, அவர்கள் சென்ற கார் கோலார் பகுதி அருகே ட்ரக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாதவி உயிரிழந்தார். காயமடைந்த மாதவியின் இரு மகள்களும் உயிர் பிழைத்தனர்.
தங்களுக்கென்று பங்களா கட்ட வேண்டும் என்று மாதவி ஆசைப்பட்டாராம். அந்த ஆசையை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீநிவாஸ் முயற்சி செய்தார்.
இதையடுத்து சுமார் 25 கட்டடக் கலைஞர்களை அணுகியிருக்கிறார். ஆனால், அவர்கள் கொடுத்த ஐடியாக்கள் எதுவும் மாதவியை நினைவுகூரும் அளவுக்கு இல்லை என ஸ்ரீநிவாஸ் எண்ணினார்.
அப்போது ஸ்ரீநிவாஸுக்கு தெரிந்த ஒருவர், மகேஷ் ரங்கன்னாதவரு என்ற கலைஞர் குறித்து கூறியுள்ளார். அவரை ஸ்ரீநிவாஸ் சந்தித்தபோது, மாதவி போன்ற உருவம் கொண்ட சிலையை வீட்டில் நிறுவலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.
இதற்காக பெங்களூருவில் உள்ள சில பிரபலமான பொம்மை செய்யும் கலைஞர்களை ஸ்ரீநிவாஸ் அணுகி தனது மனைவியின் புகைப்படங்களை கொடுத்துள்ளார். அவர்களும் மாதவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து ஸ்ரீநிவாஸை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த வேலைகளை எல்லாம் செய்து முடிக்கவே ஓராண்டாகியுள்ளது. வீடு கட்டும் பணியும் ஜூலை மாதம் நிறைவு பெற்றது. "பங்களா கட்ட வேண்டும் என்பது என் மனைவியின் விருப்பம். இப்போது அதில் வாழ அவர் இல்லை. அவர் இன்னும் இங்கு இருக்கிறார் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் இந்தச் சிலை அமைந்துள்ளது" என்றார் ஸ்ரீநிவாஸ்.
மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை! காலம் கடந்தாலும் மனைவி மீது தீராத அன்பு கொண்டிருக்கும் ஸ்ரீநிவாஸின் இந்தச் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க... 'கலைஞனின் கண்களால் என்னை பார்க்கிறேன்' - மெழுகு சிலை குறித்து உருகிய காஜல்