திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வாழ்ந்துவந்த கூடத்தில் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் ஏழு பேர் கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அக்குடும்ப சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக முன்னாள் மாவட்ட ஆட்சியர், குடும்ப பொறுப்பாளர் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கூடத்தில் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் ஏழு பேர் 1991ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஒருவர் பின் ஒருவராகச் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தனர்.பல வருடங்களாக இக்குடும்பத்தின் கவனிப்பாளராக இருந்தவர் ரவீந்திரன் நாயர்.
அவர், கூடத்தில் குடும்பத்தினரின் 30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக, புகார் எழுந்தது. சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த உன்னிகிருஷ்ணன் நாயரின் மனைவி பிரசன்ன குமாரி அளித்த புகாரில் காவல் துறையினர் வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.