தமிழ்நாடு-கேரள எல்லையான களியக்காவிளையில் காவல் சிறப்பு ஆய்வாளர் வில்சன் கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்பகுதியிலுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன. முதல்கட்டமாக கொலையை நடத்திவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடுவது குறித்த சிசிடிவி காட்சி வெளியானது.
அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் நெய்யாற்றின் கரைப் பகுதிகளில், கொலையாளிகள் சுற்றித்திரிவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளிகள் இரண்டு பேரும், நெய்யாற்றின் கரைப் பகுதியில் வீடு எடுத்து சுமார் எட்டு மாத காலம் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்தபடியே கொலை குற்றத்துக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களுக்கு சையத் அலி என்பவர் வீடு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
மேலும் அப்பகுதியிலுள்ள கோயில் ஒன்றிலும் கொலையாளிகள் நடமாட்டம் இருந்துள்ளது. தற்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் அப்துல் ஹமீம், தவுபிக் ஆகியோரை காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
தமிழ்நாடு எஸ்.ஐ. கொலை: கேரளாவில் சதித்திட்டம்! இவர்கள் மீது மேலும் சில கொலை வழக்குகளும் உள்ளன. காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் நான்கு பேரையும், தமிழ்நாட்டில் இரண்டு பேரையும் காவலர்கள் காவலில் எடுத்து விசாரித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: களியக்காவிளை எஸ்.ஐ. கொலையில் துப்பு துலங்கியது!