தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கே.சி.ஆர்.இன் கனவு 'மாபெரும் காலேஸ்வரம் திட்டம்' நனவானது! - jaggan mohan reddy

கோதாவரி நதியைப் பங்கிடுவதில் தெலங்கானா-மகாராஷ்டிரா அரசுகளுக்கிடையே பல ஆண்டுகளாகச் சிக்கல் இருந்து வந்தது. தன் மக்களின் நீர்த் தேவையைப் நிவர்த்தி செய்ய கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவதில் தவறில்லை என்று எண்ணிய கே.சி.ஆர்., பல தலைமுறைகளாக இருந்த இச்சிக்கலை ஒரு வருடத்தில் சரி செய்தார்.

சந்திரசேகர ராவ்வின் மாபெரும் கனவு

By

Published : Jun 22, 2019, 11:18 AM IST

2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து உருவாக்கப்பட்டது தெலங்கனா மாநிலம். தெலங்கானாவை உருவாக்குவதில் கே.சி.ஆர். என்று தெலங்கானா மக்களால் அழைக்கப்படும் கே. சந்திரசேகர் ராவின் பங்கு அளப்பரியது. ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய அவர், நாட்டின் 29ஆவது மாநிலத்தை உருவாக்க சுமார் 13 ஆண்டுகள் கடுமையாக களப்பணியாற்றினார்; மேலும் மக்கள் ஆதரவையும் பெற்று முதலமைச்சராகவும் ஆனார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவின் உள் மாவட்டங்கள் எப்போதும் தண்ணீரின்றி வறட்சியில் தவிப்பது பல ஆண்டுகளாகவே வாடிக்கையாக இருந்தது. இந்த வறட்சியால் ஒரே ஆண்டில் சுமார் 14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தற்போதைய தெலங்கானா பகுதியில் ஏற்படும் இந்த வறட்சியைத் தடுக்க அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதே கே.சி.ஆர்.இன் பெரிய குற்றச்சாட்டாகவிருந்தது.

காலேஸ்வரம் திட்டம்

இந்நிலையில்தான் பதவி ஏற்றார் கேசிஆர். தங்களுக்கான மாநிலமும் கிடைத்தாகிவிட்டது, மக்கள் ஆதரவும் மகத்தாக உள்ளது, கட்சிக்கான எதிரிகள் கண்ணால் மட்டுமல்ல டெலஸ்கோப்பால் பார்த்தால் கூடத் தெரியாத நிலை என அசுர பலத்துடன் ஆட்சியமைத்தார் கே.சி.ஆர்.

தற்போது தான் முன்வைத்த வறட்சிக்கான மிகப்பெரிய சிக்கலின் தீர்வை தர வேண்டும். யோசித்தார் கே.சி.ஆர்.!

2004-09 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கிக் கிடப்பிலிருந்த பிரணாஹிதா செவெல்லா நீர்ப் பாசன திட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து தெலங்கானாவின் காலேஸ்வரம் கிராமம் வரை நீடித்து தனது கனவுத் திட்டமாக அறிவித்தார்.

மாற்றியமைக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் சுமார் 45 லட்சம் ஹெக்டர் விவசாய நிலத்திற்குத் தேவையான பாசன நீரையும் தெலங்கானாவின் 70 விழுக்காடு குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டது.

திட்டத்தின் ஒரு பகுதி
திட்டமும் தயார். ஆனால் திட்டத்தைத் தொடங்குவதில் ஒரு சிக்கல். கோதாவரி நதியை பங்கிடுவதில் தெலங்கானா-மகாராஷ்டிரா அரசுகளுக்கிடையே பல ஆண்டுகளாகச் சிக்கல் இருந்து வந்தது. தன் மக்களின் நீர்த் தேவையைப் போக்கக் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவதில் தப்பில்லை என்று எண்ணினார் கேசிஆர். பல தலைமுறைகளாக இருந்த பிரச்னையை ஒரு வருடத்தில் சரி செய்தார். மகாராஷ்டிரா அரசுடன் மார்ச் 8, 2016ஆம் ஆண்டு கையெழுத்தானது ஒப்பந்தம்.
காலேஸ்வரம் திட்டத்தை விளக்கும் கே.சி.ஆர்.

சிக்கல்கள் எல்லாம் கலைந்தாகிவிட்டது. புயல் வேகத்தில் கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கட்டுமான பணிகளைத் தொடங்கிவைத்தார். இது பொறியியல் துறையில் மாபெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. காரணம் கோதாவரி நதி கடல் மட்டத்திலிருந்தது 100 அடிக்குக் கீழ் செல்கிறது. இத்திட்டத்தால் பயன்பெறப்போகும் தெலங்கானா மாவட்டங்களோ 300 முதல் 650 அடிவரை கடல் மட்டத்தைவிட உயரமாகவுள்ளது.

திட்டத்தின் மற்றொரு பகுதி

காலேஸ்வரம் திட்டத்தில் கல்வாய்களின் மொத்த நீளம் சுமார் 1,832 கிலோமீட்டர் ஆகும். அதில் 1,531 கிலோமீட்டர் இயற்கையாக நீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் 203 கிலோமீட்டர் சுரங்க கால்வாய்களையும் கொண்டது. இந்தத் திட்டத்தில் 20 நீர் மின்தூக்கி (லிஃப்ட்), 19 பம்ப் ஹவுஸ்களும் உள்ளன.

ஒரு பம்ப்பானது நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு டிஎம்சி பாய்ச்சும் ஆற்றலைப் பெற்றது. தற்போது ஒரு பம்ப்பிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4,992 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இது ஒட்டுமொத்த சென்னையின் ஒரு நாள் மின் தேவையை விட அதிகம். மேலும் இத்திட்டம் முழு செயல்பாட்டிற்கு வரும்போது மின் தேவை 7,153 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலேஸ்வரம் திட்ட வரைபடம்

கோதாவரி நதியில் ஆகஸ்ட்- அக்டோபர் மாதங்களில் ஏற்படும் வெள்ளத்தால் 140-180 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு தெலங்கானாவின் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும்.

காலேஸ்வரம் திட்டத்தின் மொத்தச் செலவு

சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் 13 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கே.சி.ஆர்.இன் இந்த மாபெரும் திட்டக்கனவு நேற்று நிறைவேறியது. இத்திட்டத்தை ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அம்மாநில ஆளுநர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தொடங்கிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details