பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை முந்திச் சென்றதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காவலர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில், உள்ளூர் கபடி வீரரான குர்மெஜ் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர்கள் ரஞ்சித் சிங், பல்ஜித் சிங், தலைமைக் காவலர்கள் அவதார் சிங், பல்கர்சிங், சுரிந்தர் சிங், முதலமைச்சரின் பாதுகாப்புக் காவலரான சிம்ராட் சிங் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து முதன்மை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்பால் சிங் கூறுகையில், நேற்றிரவு (ஆக. 30) காவலர்கள் இரண்டு கார்களில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்ற போது, அந்தக் காரை ஓட்டிச் சென்ற பெண், சாலை குறுகலாக இருந்ததன் காரணமாக வழி விடாமல் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேலாக தனது வாகனத்தை துரத்தி வந்த காவல் துறையினரைக் கண்டு அச்சமடைந்த அந்தப் பெண், தனது உறவினரான உள்ளூர் கபடி வீரர் குர்மெஜ் சிங்கிற்கு (வயது 28) தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கபடி வீரர், பெண்ணைத் துரத்தி வந்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் குர்மெஜை சுட்டதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இது குறித்து அறிந்த குர்மெஜின் நண்பர்களும், கபடி வீரர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்த காவல் துறையினரை சிறைப் பிடித்துள்ளனர்.
இதையடுத்து இளைஞரை சுட்டுக் கொன்ற காவலர்கள் ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு: குண்டாசில் 5 பேர் கைது!