கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மருத்துவப் பணிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் ஒரு முக்கிய முயற்சியாக பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரண நிதியத்தின் கீழ் உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக அவை வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாவட்டத்தில் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவமனைக்கு 35 "மேட் இன் இந்தியா" வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உதம்பூர் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் விஜய் ரெய்னா கூறுகையில். "யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அரசின் வென்டிலேட்டர்கள் வழங்கும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
முந்தைய காலங்களில் வென்டிலேட்டர்களைக் கொண்ட ஐ.சி.யுக்கள் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இயங்கிவந்தன. வென்டிலேட்டர்களைக் கொண்ட பிற மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை நாங்கள் அனுப்பி வைத்து, அங்கே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவந்தோம். கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, வென்டிலேட்டர்களின் ஆதரவு தேவைப்படும் கடும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமத்தை நாங்கள் எதிர்கொண்டோம்.
இங்கு வரும் ஒவ்வொரு 100 நோயாளிகளில் 90 பேர் வீட்டிலேயே சிகிச்சைப் பெறும் அளவிலேயே இருந்தனர். 10 விழுக்காடு மக்கள், சுவாச பிரச்னைகள் மற்றும் அதிக காய்ச்சல் ஏற்படக்கூடிய அறிகுறி கொண்ட நோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது நாங்கள் வென்டிலேட்டர்களின் தேவையை அதிகமாக உணர்ந்தோம்.
அந்த நெருக்கடி இனி இங்கே எழாது. கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் குறுகிய காலத்திற்குள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்களை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி" என அவர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைக்கு வருகை தந்த உதம்பூர் மக்களும் இந்த முயற்சியை மேற்கொண்டமைக்கு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.