டெல்லி: அதிதிறன் கொண்ட ராணுவ வாகனங்களுடன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, பரபரப்பான எல்லைப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் இந்தியா - சீனா எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமும், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையும் இணைந்து பாதுகாத்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு மத்தியில், சீனா - இந்தியா எல்லையில் நடந்து வரும் சாலை திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்ததுடன், அவற்றில் 32 பணிகளை வேகமாக முடிக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சகம் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மத்திய பொதுப்பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்துறை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
"சீனாவின் எல்லையில் உள்ள 32 சாலைத் திட்டங்களில் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திட்டங்களை விரைவாக செய்து முடிப்பதில் தங்கள் ஒத்துழைப்பை வழங்கும்" என்று கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா - இந்தியா எல்லையில் மொத்தம் 73 சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில், எல்லைப்புற உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் உள்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் எல்லை சாலைகள் அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது.
ராணுவ மோதல் உச்சத்தில் உள்ள லடாக்கில் எல்லைப்புறங்களில் மூன்று முக்கிய சாலைகள் கட்ட ஏற்கனவே திட்டமிட்டு நடந்து வந்தாலும் மோதல்களை அடுத்து அந்த பணிகளும் துரிதப்படுத்தட்டுள்ளன. சாலைகள் தவிர, மின்சாரம், சுகாதாரம், தொலைத் தொடர்பு மற்றும் கல்வி போன்ற பிற எல்லை உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கும் இனிமேல் இந்தப் பகுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய எல்லையோரங்களில் சாலைகளை அமைப்பதுடன் மக்கள் குடியேறும் வகையில் அனைத்து வசதிகளையும் உருவாக்க முடிவு எடுத்திருப்பது அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் என கூறப்படுகிறது. 2008 - 2017ஆம் ஆண்டுகளில் வெறும் 230 கி.மீ. சாலைகள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், 2017 - 2020 ஆண்டுகளில் அதாவது போக்லாம் பிரச்னைக்குப் பிறகு மட்டும் எல்லையில் 470 கி.மீ சாலைப் பணிகளை மோடி அரசு வேகமாக நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.