தற்போதெல்லாம், நாட்டில் குற்றவியல் நீதித்துறை அமைப்பானது, ஓலமிடும் சாமானியர்களை எளிதில் சென்றடைவதில்லை என்று தெரிகிறது. ஒருபுறம், பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் நீதி கேட்டு வருகிறார்கள். மறுபுறம், குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவர அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், குற்றவிகிதம் பலமடங்காக அதிகரித்து வருவதாக தெரிகிறது. இது, அதே குற்றத்தை குற்றவாளிகள் திரும்பத் திரும்ப செய்வதற்கான சூழலை உருவாக்குகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், வீதியில் துணிகரமாக எரிக்கப்பட்ட கொடூர சம்பவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்திய குற்றவியல் நீதித்துறை நீதி வழங்கி உதவிட முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
வேதனையில் சாமானியரின் இதயம் எரிவது போல் இவை இருப்பதால் தான், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) ஆகியவற்றில் பெரியளவில் சீர்திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைக்கிறது. அதன்படி, சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு நலன்கள் கருதி, அதற்கேற்ப சட்டத்தில் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தேவையான மாற்றங்கள் குறித்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்தையும் மத்திய அரசு கோருகிறது. நவீன ஜனநாயக விருப்பங்களுக்கேற்ப, அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பலவீனமான பிரிவினருக்கு, சட்டம் மற்றும் உடனடி நீதி கிடைப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1860ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஐபிசி பிரிவுகளும், 1872ஆம் ஆண்டின் சான்றுகள் சட்டமும் இன்றைய தேவைகளுக்கு இணங்கத் தவறிவிட்டன என்று கருதும் பல பகுப்பாய்வாளர்கள், அவற்றில் உள்ள ஓட்டைகள், குற்றவாளிகள் எளிதாக தப்பி வெளியேற உதவுவதாக கூறுகின்றனர்.
நீதியை தாமதப்படுத்துவது நீதியை மறுப்பதற்கு சமம் மட்டுமல்ல. ஒரு சரியான நீதி அமைப்பையே அழிப்பதற்கு சமம் என அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி முன்பு எச்சரித்திருந்தார். இந்த கருத்தை மனதில் கொண்டு, வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் போன்ற முன்னாள் பிரதமர்கள், உடனடி சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். இருப்பினும், குழுக்கள் அமைப்பதை கடந்து இந்த அறிவிப்பு தோல்வியில் முடிந்தது. பல மாதங்களாக, குற்றவியல் நீதிச்சட்டங்களை தீவிரப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மட்டுமே பதிலளித்துள்ளன. அமைதி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதுகாப்பு என்ற ஒரு பொதுவான குறிக்கோளுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
நவீன சட்டக்கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும் என்.ஆர். மாதவ் மேனன், "குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட குற்றவியல் நீதி அமைப்பு, நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களை எட்டும் வகையில் செயல்படவில்லை" என்ற கருத்தை 2016ஆம் ஆண்டில் தெரிவித்தார். முறையான நீதித்துறை செயல்முறைகளை வழங்குவதில் ஏற்படும் மிகுந்த தாமதங்கள், குற்றவாளிக்கு தண்டனை வழங்கலில் ஏற்படும் தாமதம், குற்றங்களை மீண்டும் செய்வதற்கான வலிமையை குற்றவாளிகளுக்கு அதிகரிக்க செய்கிறது. வழக்குத் தொடர்வதற்கு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட பரந்த அளவிலான அதிகாரம், சக்திவாய்ந்தவர்களுக்கு மட்டுமே உதவுகிறது. ஊழலை அம்பலப்படுத்த போராடிவரும் சமூக செயற்பாட்டாளர்கள் இதனை கண்டு அஞ்சுகின்றனர். மேலும், அப்பாவி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அழிக்க, இது வழிவகுக்கிறது.
இதற்கு தீர்வு காண, 2000ஆம் ஆண்டில், நீதிபதி வி.எஸ். மாலிமத் தலைமையில் ஒரு சிறப்புக்குழுவை வாஜ்பாய் தலைமையிலான அரசு அமைத்தது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்குழு ஒரு முக்கிய அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நீதித்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவது தொடர்பாக 158 பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. இது முழு நீதி அமைப்பையும் அடிப்படையாகக் கொண்ட, ‘உண்மையை தேடும்’ வழிகாட்டு கொள்கையாக இருக்க வேண்டும் என்று நீதிபதி மாலிமத் குழு மேலும் வலியுறுத்தியது.