ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தேடிவருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் அளிக்குமாறு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை இன்று காலை அணுகினார்.
பின்னர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, அவரது மனுவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தங்களின் வாதத்தை கேட்காமல் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத்துறையும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இது சிதம்பரத்துக்கு முன்ஜாமின் கிடைப்பதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.