மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் சகிப்புத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டு மதவாதம் தலை தூக்கியுள்ளதாக சில தரப்பினர் தொடர் குற்றம்சாட்டிவருகின்றனர். ”ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்தை போர் முழக்கம் போல் சில அமைப்பினர் பயன்படுத்தி சிறுபான்மையினர் மீது தாக்குதல் ஏவப்படுகிறது என இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யாப், அபர்னா சென், வரலாற்று ஆசிரியர் ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினர்.
'49 VS 62' - சகிப்புத்தன்மை குறித்து பிரபலங்களுக்குள் மூண்ட கடிதப் போர்!
டெல்லி: ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் நாட்டில் சகிப்புத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்கு அன்மையில் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றை நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 62 பிரபலங்கள் இன்று எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக தவறான பிம்பத்தைக் கட்டமைத்து அவரின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இவர்கள் ஈடுபடுகின்றனர். நக்சல், பிரிவினைவாதிகளால் பழங்குடியினரும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் மவுனம் காத்துவிட்டு இப்போது குறிப்பிட்ட சில விவகாரங்களை அரசியலாக்கும் வகையில் பெரிதுபடுத்த முயற்சி செய்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டின் சகிப்புத்தன்மை குறித்து பிரபலங்கள் இவ்வாறு கடிதப் போரில் ஈடுபட்டுள்ளது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.