தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யோகாவை பற்றி தெரிந்து கொள்வோம் - யோகாவை பற்றி தெரிந்து கொள்வோம்

தன்னை உணர்ந்து கொள்ளுதல், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ‘விடுதலை உணர்வை அடைதல் (மோக்‌ஷா) அல்லது ‘சுதந்திரம்’ (கைவல்யா) தான் யோகாவின் குறிக்கோள். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுதந்திர உணர்வு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை யோக பயிற்சியின் முக்கிய நோக்கம். "யோகாவின்” மூலம் அகத்தில் பல்வேறு வகைகளில் பொதிந்துள்ள அறிவியலை உணர்வதோடு, அதில் நிபுணத்துவம் பெற்று விதியை வெல்லலாம்.

யோகா
யோகா

By

Published : Jun 21, 2020, 10:47 PM IST

யோகாவும் அதன் வரலாறும்

யோகா என்பது மிக நுண்ணிய அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக ஒழுக்கம். இது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், யோகா என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் கலை மற்றும் அறிவியல். மனதுக்கு நிரந்தர அமைதியை அளித்து, நாம் யாரென்பதை உணந்துகொள்ளும் வகையில் உடலும் மனமும் ஆன்மிகத்துடன் இணைந்து பயிற்சி செய்யும் இந்தக் கலை, பண்டைய இந்தியாவில் தோன்றியது.

’யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ‘யுஜ்’ என்ற சொல்லில் இருந்து பிறந்தது, ‘இணைவதற்கு’ அல்லது ‘கலப்பதற்கு’ அல்லது ’ஒன்றிணைவதற்கு’ என்பது தான் இந்த சொல்லின் பொருள்.

தன்னை உணர்ந்து கொள்ளுதல், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ‘விடுதலை உணர்வை அடைதல் (மோக்‌ஷா) அல்லது ‘சுதந்திரம்’ (கைவல்யா) தான் யோகாவின் குறிக்கோள். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுதந்திர உணர்வு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை யோக பயிற்சியின் முக்கிய நோக்கம். "யோகாவின்” மூலம் அகத்தில் பல்வேறு வகைகளில் பொதிந்துள்ள அறிவியலை உணர்வதோடு, அதில் நிபுணத்துவம் பெற்று விதியை வெல்லலாம்.

மேற்கில் இதன் வரவேற்பு –சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளில் நமது புகழ் பரப்பியதில் வெற்றிகண்டதைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் சென்ற குருக்கள், யோகப் பயிற்சியை அங்கு அறிமுகம் செய்தனர். 1980களில் மேற்கத்திய உலகில் யோகப் பயிற்சியானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சியாக புகழ்பெறத் தொடங்கியது. இந்த வகை யோகாவை ஹதா யோகா என்றழைத்தனர்.

யோகா சாதனாவின் அடிப்படைகள்:யோகா ஒரே நேரத்தில் ஒருவரின் உடல், மனம், உணர்வு மற்றும் ஆற்றலின் மீது செயல்படுகிறது. இது நான்கு நிலைகளாக வகுக்கப்படுகிறது: கர்ம யோகா, இது உடலின் மீது செயல்படுகிறது; பக்தி யோகா, நமது உணர்வுகளின் மீது செயல்படுகிறது; ஞான யோகா, நமது மனம் மற்றும் அறிவின் மீது செயல்படுகிறது; க்ரியா யோகா, நமது ஆற்றலின் மீது செயல்படுகிறது.

உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் யோகாவை பயிற்சி செய்து வருவதாக, சர்வதேச யோகா கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச யோகா தினம் அனுசரிப்பதற்கான யோசனையை பிரதமர் நரேந்திர மோடி, முதன் முதலில் 27, செப்டம்பர் 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றும் போது முன்மொழிந்தார்.

மோடியின் உரை:-

யோகா என்பது பண்டைய இந்தியா நமக்களித்த மதிப்பிட முடியாத பாரம்பரிய பரிசு. இது மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கிறது; எண்ணத்தையும் செயலையும் ஒருங்கிணைக்கிறது; அடக்கம் மற்றும் முழுமையை ஒருங்கிணைக்கிறது; மனிதனுக்கும் இயற்கைக்குமான நல்லிணக்கத்தை ஒருங்கிணைக்கிறது; ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆன்மிக வழியில் ஒருங்கிணைக்கிறது. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, உங்களையே உங்களுக்கு அடையாளம் காட்டுவதோடு, இயற்கை மற்றும் உலகை அறிமுகம் செய்கிறது. நமது வாழ்க்கைமுறையை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமாக வாழ வழிசெய்கிறது. எனவே, சர்வதேச யோகா தினத்தை கடைபிடிப்போம்.

ஐநா பொதுச்சபையில் நரேந்திர மோடியின் முதல்கட்ட அறிமுகத்தை அடுத்து, 14, அக்டோபர் 2014 அன்று ஐநா பொதுச்சபையில் ”சர்வதேச யோகா தினம்” என்ற தலைப்பில் முறைசாரா மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை இந்திய தூதுக்குழு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை நினைவுகூறும் விதமாக 2015ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வடக்கு அரைகோளத்தில் ஜூன் 21ஆம் தேதி நீண்ட நாளாக இருப்பதாலும், உலகின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க சிறப்பை அன்றைய தினம் பெறுவதாலும், அன்று சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஐநா பொதுச்சபை உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 21 அன்று உலக யோகா தினம் அனுசரிக்கப்படும் என்று, டிசம்பர் 11, 2014 அன்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. முதல் சர்வதேச யோகா தினத்தன்று மிகப் பெரிய யோகா பயிற்சி வகுப்பு மற்றும் மிக அதிகளவில் நாட்டு மக்கள் பங்கேற்ற நிகழ்வு என்ற சாதனைகள் படைக்கப்பட்டன.

முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதிஅனுசரிக்கப்பட்டது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவில் மோடி தலைமையில் 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 35,985 பேர் மிகப் பெரிய யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். டெல்லி ராஜ்பவனில் நடந்த இந்த மிகப் பெரிய நிகழ்வில் 35 நிமிடங்களுக்கு மொத்தம் 21 ஆசனங்கள் ( யோகா பயிற்சிகள்) மேற்கொள்ளப்பட்டன. 84 நாடுகளைச் சேர்ந்த மிக அதிகளவிலான மக்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய யோகா பயிற்சி வகுப்பு என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்தது.

2016ஆம் ஆண்டு சண்டிகரில் யோகா தினத்தை கொண்டாடியது இந்தியா –30,000 பேர் கலந்து கொண்ட இந்த பயிற்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய மோடி, யோகா என்பது மதம் சார்ந்த செயல் அல்ல, அது உடலும் மனமும் ஆரோக்கியம் பெற மேற்கொள்ளும் நடவடிக்கை என்றார்.

2017ஆம் ஆண்டு லக்னோவில் யோகா தினத்தை கொண்டாடியது இந்தியா –மூன்றாவது ஆண்டு சர்வதே யோகா தினம், மழையுடன் தொடங்கியது. லக்னோவில் ராமாபாய் அம்பேத்கர் சபா ஸ்தல் அரங்கில் பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட 51,000 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

2018ஆம் ஆண்டு டேஹ்ராடூனில் யோகா தினத்தை கொண்டாடியது இந்தியா –உத்தர்காண்ட் மாநிலம் டேஹ்ராடூனில் உள்ள வனக் காப்பக ஆய்வு மையத்தில் 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய மோடி, யோகா யாரையும் பிரிக்காது, ஒன்றிணைக்கும் என்றார். யோகா என்பது உலகை ஒன்றிணைக்கும் சக்தி என்றும் அவர் எடுத்துரைத்தார்.

2019ஆம் ஆண்டு ராஞ்சியில் யோகா தினத்தை கொண்டாடியது இந்தியா- 2019ஆம் ஆண்டு ராஞ்சியில் உள்ள ப்ரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் மிகப் பெரிய யோகா கொண்டாட்டம் நடந்தது.

2020 ஆண்டுக்கான கருப்பொருள்: வீட்டில் யோகா & குடும்பத்துடன் யோகா

2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் டிஜிட்டல் மீடியா தளங்களில் கொண்டாடப்படுகிறது.

கோவிட் 19 நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தில் பெரிய அளவிலான கூட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மாற்றாக, டிஜிட்டல் மீடியா தளங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘வீட்டில் யோகா & குடும்பத்துடன் யோகா’. மக்கள் ஜூன் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு காணொலி காட்சி மூலம் மூலம் யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் டிஜிட்டல் மீடியா வழியாகவும், யோகாவை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மன அழுத்தத்தை குறைக்க, ஒருமுகப்படுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த யோகா நுட்பங்கள் -

பல்வேறு வகையான யோகா நுட்பங்கள் உள்ளன, அவற்றில் பொதுவானவை -

சூரிய நமஸ்காரம்: சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல். மன அழுத்தத்தை குறைத்து மனதுக்கு அமைதியையும் ஒருமுகப்படுத்தலையும் அதிகரிக்கும்.

தியானா(தியானம்): எண்ண ஓட்டங்கள் ஏதுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் நிலை. ஆழமான அமைதியை அளிப்பதோடு, பதட்டத்தைக் குறைத்து, தசை இறுக்கத்தை தளர்த்தி, தலைவலியை போக்குகிறது.

ப்ரணாயாமா: இதற்கு “சுவாசத்தில் ஒரு இடைநிறுத்தம்" என்று அர்த்தம். இது ஆன்மிக பலத்தை அதிகரிப்பதோடு, உற்சாகத்தையும் ஆழ்நிலை அமைதியையும் அளிக்கிறது.

கோவிட் 19 & யோகா-

யோகா நமது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கோவிட் -19 பாதிப்பைத் தடுக்கிறது.

சில யோகா மற்றும் ப்ரணாயாமா பயிற்சிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் சுவாச ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. – ப்ராஹ்மரி பயிற்சியானது, நைட்ரிக் ஆக்ஸைடு அதிகரிப்பின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, மூக்கில் எண்ணெய் விடுதல், ஆவி பிடித்தல், தியானம் இவை வைரஸ் தாக்கக்கூடிய அனைத்து காரணிகளையும் தடுத்து எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. தியானத்துடன் கூடிய யோகா பயிற்சியின் மூலம் எளிதாக கோவிட் -19 பாதிப்புக்கு பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

மிகச் சிறந்த ஆரோக்கிய சூழலை உருவாக்குவதற்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் தியானம் ஆகியவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகா என்பது எந்த மதத்தையும், நம்பிக்கையையும், சமூகத்தையும் சார்ந்ததல்ல; எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவியாக பயன்படுகிறது. பாரம்பரியம், பண்பாடு, நம்பிக்கை இவற்றைத் தாண்டி யோகாவை நம்பி உண்மையாக பயிற்சி செய்பவர்கள் அதன் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

புகழ்பெற்ற யோகா குருக்கள்

திருமலை கிருஷ்ணமாச்சார்யா: ’நவீன யோகாவின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். வின்யாசா கட்டமைப்பாளராக இவர் புகழ் பெற்றார், அத்துடன் ‘ஹதா யோகா’ மீட்டமைப்பிலும் முக்கிய பங்கு வகித்தார். இவருக்கு ஆயுர்வேதத்திலும் யோகா பயிற்சியிலும் நிபுணத்துவம் இருந்ததால், ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்காற்றினார். மூச்சை அடக்குவதில் நிபுணரான இவர், அதில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கிறார்!

சுவாமி சிவானந்தா:தொழில்முறை மருத்துவரான இவர், துறவியாக இருந்தார். தனது நகைச்சுவை உணர்வுக்காக புகழ்பெற்றவர். யோகக் கலையில் 18 குணநலன்கள் பற்றி நகைச்சுவை ததும்ப பாடல் எழுதியிருக்கிறார்! ஹதா யோகா, கர்ம யோகா மற்றும் மாஸ்டர் யோகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து யோகா பயிற்சி அளித்துள்ளார்.

பிகேஎஸ் ஐயங்கார்:இவர் டி.கிருஷ்ணமாச்சார்யாவின் ஆரம்ப கால சீடர். வெளிநாடுகளில் யோகக் கலை புகழ்பெறுவதற்கு இவர் பெரும்பங்காற்றினார். குழந்தைப் பருவத்திலிருந்தே, பல்வேறு வியாதிகளால் தாக்கப்பட்டு பலமிழந்து காணப்பட்டார். பின்னர் யோகாவைத் தொடங்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களை மறுவரையறை செய்து ‘’ஐயங்கார்’’ யோகாவை உலகுக்கு அளித்தார். 95 வயதில் உயிரிழக்கும் வரை யோகாசன பயிற்சி செய்ததோடு, அரை மணி நேரம் சிரசாசனம் செய்யும் அளவுக்கு திறன் பெற்றிருந்தார்.

கே பட்டாபி ஜாய்ஸ் :அஷ்டங்க வின்யாச யோகா அல்லது அஷ்டங்க யோகாவை பயிற்றுவித்தார். யோக கொருன்டா என்ற பண்டைய சொல்லை அடிப்படையாகக் கொண்டது இது. இந்த யோகாவின் மூலம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் உள்ள பல நட்சத்திரங்கள் சீரான உடற்கட்டைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: மடோனா, க்வினெத் பால்ரோ மற்றும் கரீனா கபூர்.

மஹரிஷி மஹேஷ் யோகி:இவர் ஆழ்நிலை தியான நுட்பங்களை அறிந்தவர். இதனால் அமெரிக்காவின் பீட்டில்ஸ் இசைக்குழுவால் ஈர்க்கப்பட்டவர். கண்களை மூடி மந்திரங்களை உச்சரித்து மேற்கொள்ளும் தியானம் இது.

பரமஹன்ச யோகானந்தா: மேற்கத்திய நாடுகளில் க்ரியா யோகா நுட்பத்தை அறிமுகம் செய்தவர். ஒருமுகப்படுத்தும் இவரது யோகப் பயிற்சியை க்ரியா மூலம் கற்றுக்கொடுத்தார்.

பாபா ராம்தேவ்: மாநாடு போல நடக்கும் இவரது யோகா வகுப்புகளால் யோகாவை அனைவரும் திரும்பிப் பார்க்கச் செய்தவர். தொலைக்காட்சிகள் வாயிலாக இவர் கற்றுக்கொடுக்கும் யோகா பயிற்சிகளை ஏராளமானோர் வீடுகளில் இருந்துகொண்டே கற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகளவில் உள்ள லட்சக்கணக்கானோர், பண்டைய யோக கலைகளையும், நவீன கலைகளையும் கற்றுத்தரும் குருக்களால் பயனடைந்து வருகின்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் இந்தப் பயிற்சியால், சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு மற்றும் சுய மதிப்புகளை வளர்த்துக்கொள்ள முடியும். நாளுக்கு நாள் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

யோகாவை புரிந்து கொள்ள சிறந்த வழி:

நீங்களாகவே முயற்சி செய்யுங்கள்!

இதையும் படிங்க: ஒற்றுமையை உணர்த்தும் தினம் இது : மோடி

ABOUT THE AUTHOR

...view details