இந்திரா காந்தி பெயரில் சுற்றுச்சூழல் அறிவியல் இருக்கை அமைப்பதற்காக பெங்களூரில் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்துடன் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் தலைவர் சோனியா காந்தி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் பேசிய மன்மோகன் சிங், "இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நல்ல முன்னேற்றம் அடைந்தது" என்றார்.
சோனியா காந்தி பேசுகையில், "இந்திரா சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரித்தவர். வனவிலங்களை பாதுகாப்பதற்கும், காடுகளை பாதுகாத்தல், காற்று மற்றும் நீர் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் இன்று நம்மிடம் உள்ள சட்டங்களுக்கு சோனியாவின் பங்கு அதிகம் உள்ளது. 1972ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா.வின் முதல் மாநாட்டில் உரையாற்றிய ஒரே பிரதமர் இந்திரா காந்தி” என கூறினார்.