ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசிவருகிறார். இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் தனது 67ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். முன்னதாக, கார்கில் போரில் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்துப் பேசுவதாக மோடி ட்வீட் செய்திருந்தார்.
அதன்படி கார்கில் போர் குறித்தே பேசினார். நிகழ்வில், "இன்று கார்கில் போரில் இந்தியா வெற்றி கண்ட நாள். இந்தியாவின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் மோசமான திட்டங்களுடன் கார்கில் பகுதிக்கு வந்தது. கார்கில் போரை இந்தியர் எவராலும் மறக்கமுடியாது. இந்தியா பாகிஸ்தானுடன் நட்புறவை வைத்துக்கொள்ளவே விரும்பியது. ஆனால், இந்தியாவை பாகிஸ்தான் முதுகில் குத்தியது. ஆனால், கார்கில் போரில் இந்தியாவின் வீரத்தை உலகம் கண்டுகொண்டது.