இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில், இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையின்போது, இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ளதால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய - சீன மோதல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்! - india china border issue
டெல்லி: இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், இந்திய - சீன அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய - சீன மோதல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து இந்திய - சீன அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 2020 ஜூன் 15 மாலை, சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக தான், வன்முறை நேருக்கு நேர் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் உயிரிழப்புகளைச் சந்தித்தனர். சீன உயர் அலுவலர்கள் முறையாக நடந்திருந்தால், உயிர் சேதத்தை தவிர்த்திருக்கலாம். எல்லை நிர்வாகத்திற்கான அணுகுமுறையில் இந்தியா தெளிவாக உள்ளது. சீனாவும் அதே போல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதிலும், உரையாடல் மூலம் வேறுபாடுகளை தீர்ப்பதிலும் உறுதியாக இருப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.