இந்தியாவில் இருக்கும் முதல் விண்வெளி ஆய்வக "ஆஸ்ட்ரோசாட்"-ஐ பயன்படுத்தி இந்திய வானியல் ஆய்வாளர்கள் 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் புதிய விண்மீன் கூட்டம் (கேலக்ஸி) ஒன்றை கண்டுபிடிப்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து விண்வெளித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது விண்வெளி பயணங்களில் ஒரு முக்கிய சாதனையாக, இந்திய வானியலாளர்கள் பிரபஞ்சத்தின் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விண்மீன் கூட்டத்தை (Star galaxies) கண்டுபிடித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானியல் ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் பாராட்டியுள்ளது. இதுகுறித்து நாசாவின் பொது விவகார பிரிவு அலுவலர் ஃபெலிசியா சவு கூறுகையில், "அறிவியல் என்பது உலகெங்கிலும் உள்ள ஆராய்சியாளர்களின் கூட்டு முயற்சி.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இந்த பிரபஞ்சத்தில் எங்கிருந்து நாம் வருகிறோம், எங்கு செல்கிறோம், எங்கு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள மனிதகுலத்திற்கு உதவுகின்றன" என்றார்.
புதிய விண்மீன் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "இந்தியாவின் முதல் பல அலைநீள விண்வெளி ஆய்வகம் (Multi-Wavelength Space Observatory) ஆஸ்ட்ரோசாட் பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து வெளியாகும் புற ஊதா ஒளியைக் கண்டறிந்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம்" என்றார்.
AUDFs01 என அழைக்கப்படும் இந்த புதிய விண்மீன் கூட்டம் புனேவின் வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக மையத்தைச் சேர்ந்த டாக்டர் கனக் சஹா தலைமையிலான வானியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக மையத்தின் இயக்குநர் மக் ரே சவுத்ரி கூறுகையில், " நமது வானியல் ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் இருண்ட யுகங்கள் எவ்வாறு முடிவடைந்தது என்பது குறித்து நாம் அறிந்துகொள்ள உதவும் மிக முக்கிய கண்டுபிடிப்பு" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்!