இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அண்டை நாடான சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய வீரர்கள் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வருவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளை குவித்து வருகின்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போன்று காணொலி காட்சி ஒன்று பரவியது. அந்தக் காட்சியில் இந்திய வீரர்கள், சீன வீரர்களை கைகளால் தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த காணொலிக் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இதற்கிடையில் இந்திய வீரர்கள் காயமடைந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (மே31) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிழக்கு லடாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே எந்த வன்முறையும் நடைபெறவில்லை' என்று தெரிவித்துள்ளது.
அதில், 'காணொலிக் காட்சியின் உள்ளடக்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது வரை கிழக்கு லடாக் பகுதியில் எந்த வன்முறையும் நடக்கவில்லை' என கூறப்பட்டுள்ளது. எனினும், சமூக வலைதளத்தில் பரவிய காணொலிக் காட்சிகள் இந்திய, சீன ராணுவத்தினர் நடத்திய முந்தைய மோதலா? என்பது குறித்து அறிக்கை தெளிவுப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு