நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ”மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணர்ந்தால், இங்கே வராதீர்கள்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் நான் மும்பை வருவேன் என கங்கனா சவால் விட்டதால், இரு தரப்பிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களா வீட்டில் சட்டவிரோதமாக புதுப்பித்தல் பணிகள் நடப்பதாகவும், எனவே உடனடியாக அதனை இடிக்கப் போவதாகவும் மும்பை மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு ஒரே நாளில் அவரது வீட்டின் ஒரு பகுதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
தனது வீட்டை இடிப்பதற்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் சமயத்திலே, அவசரமாக வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, மாநகராட்சியை இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.