ஒரு பக்கம் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்துவருகிறது. மறுபக்கம் சீனாவுடன் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் சார்பாக மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆய்வுப் பொருளாக 'சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்போம்' என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நிஷா திசாய் பிஸ்வால் கூறுகையில், "இரு நாட்டு உறவின் மூலம் சிறப்பான முறையில் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் உறுதிபூண்டுள்ளோம். மக்களின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கட்டமைக்க இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. ஆனால், உலக நன்மைக்கே அவர்கள் பயன்படுவார்கள். இதனையே நாங்கள் இந்த மாநாட்டில் எதிர்பார்க்கிறோம்" என்றார்.