தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் இந்தியா முன்னேற்றம் - ஐ.நா ஆய்வு ஒரு அலசல் - இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யு.என்.எப்.பி.ஏ அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா மக்கள்தொகை கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா ஆறிக்கை

By

Published : Apr 30, 2019, 4:10 PM IST

இந்தியாவின் முக்கிய பிரச்னையாக நீண்டகாலமாக கருதப்படுவது மக்கள்தொகை பெருக்கம். 130 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா உலகளவில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் சீனாவின் மக்கள் தொகையோ 142 கோடியாகும். இந்தியா விரைவில் சீனாவை மிஞ்சி, உலகில் அதிக மக்கள் தொகை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என ஆய்வாளர்களின் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது எதிர்காலத்தில் அபாயமா என்ற கேள்வி மனதில் எழலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா, 'மக்கள்தொகை கட்டுப்பாட்டில்' சிறப்பாக செயல்பட்டு வருவதை ஐ.நா ஆய்வறிக்கை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை சராசரி வளர்ச்சி விகிதம்

ஐ.நா ஆய்வறிக்கை:

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யு.என்.எப்.பி.ஏ மக்கள்தொகை சார்ந்த விவரங்களை கையாளும் அமைப்பாகும். இது 2019ஆம் ஆண்டுக்கான உலகமக்கள் தொகை தொடர்பான ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த ஆய்வில் இந்தியா தொடர்பாக வெளிவந்துள்ள முக்கிய புள்ளிவிவரங்கள்:

  • 2011-2019 ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி வருடத்திற்கு சராசரியாக 1.2 சதவிகிதமாக உள்ளது.
  • 2001-2011 ஆண்டுளில் மக்கள் தொகை சராசரி வளர்ச்சி 1.64 சதவிகிதமாக இருந்தது. 1.64 சதவிகிதத்திலிருந்து நடப்பு சராசரி 1.2 சதவிகிதமாக குறைந்துள்ளது மிகப்பெரிய மாற்றம்.
  • 1991 ஆம் ஆண்டில் 1000க்கு 30 ஆக இருந்த பிறப்பு விகிதம், தற்போது 20 ஆக குறைந்துள்ளது.
  • 1975 ஆண்டில் சராசரியாக ஒருவர் 5 குழந்தைகள் பெற்ற நிலையில் தற்போது 2-3 குழந்தைகள் மட்டுமே பெறுகின்றனர்.
  • 20 ஆண்டுகளில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் குழந்தை பெறும் விகிதம் பாதியாக குறைந்துள்ளது.
    சரிந்து வரும் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கம்

மேற்காண்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இந்திராகாந்தி பிரதமராக இருந்துபோது குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதுவே இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி போக்கை மாற்றிய காலகட்டம் என ஐ.நா ஆய்வு தெரிவிக்கிறது.

எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்:

நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் சவால்களையும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டில் இந்தியாவின் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகியவை இன்னும் பின் தங்கியே உள்ளன. நாட்டின் கணிசமான பகுதிகளில், குறிப்பாக வடமாநிலங்களில் 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது இன்னும் தொடர்ந்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் சுகாதார சார்ந்த உரிமைகள் பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்பக்கட்டுப்பாடு குறித்த முடிவுகளை பெண்கள் எடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. மக்கள்தொகை தொடர்பாக வட, தென்மாநிலங்களில் காணப்படும் மேற்கண்ட மாறுபட்ட சூழலால், எதிர்காலத்தில் தென்மாநிலங்களில் வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வடமாநிலத்திலிருந்து தென்மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் நிலவலாம்.

அத்துடன் இளம்தலைமுறையினர் அதிகம் கொண்ட நாடாக உலகில் உள்ள இந்தியா, இளைஞர்களுக்கான வேலைவாய்பை உருவாக்கி, மனிதவளத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிறது ஆய்வு.

ABOUT THE AUTHOR

...view details