இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டிக்கப்படாத நிலையில், அவர்களை பன்னாட்டு சட்டங்களின் முன் நிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆம் கூட்டத்தொடர், வரும் பிப்ரவரி 22 ஆம் நாள் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 24 ஆம் நாள் இலங்கை போர்க்குற்றம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன்மீது விவாதம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மார்ச் 22 ஆம் நாள் இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆண்டுக்கு ஆண்டு இலங்கையை வலியுறுத்துவதும், அதை சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. உலகின் மிக மோசமான இனப்படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகள் கடந்த பிறகும், அதற்கு காரணமானவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்கத் தவறுவது ஈழத்தமிழர்களுக்கு உலக சமுதாயம் செய்யும் பெருந்துரோகம். இந்த துரோகத்தில் இந்தியா எந்த காலத்திலும் பங்காளியாக இருந்து விடக்கூடாது.