கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 933 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 215 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், "ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பிரிட்டனில் கோவிட்-19 இறப்பு விழுக்காடு 63.13ஆக உள்ளது. இது முறையே ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் 36.30, ஜெர்மனி 27.32, பிரேசில் 23.68, ரஷ்யா 5.62 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்தல் மற்றும் கண்காணிப்பு, மருத்துவமனைகளின் சிறப்பான செயல்பாடுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 30.4 விகிதத்திலேயே கரோனா தொற்று உள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும்.