இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நிலவிவருகிறது. அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், பதற்றம் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அலுவலர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது, இருப்பினும் எல்லையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுக்கு இடையே நேற்று(செப். 22) காலை ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இரவு 11 மணிவரை நீடித்தது. இதில் எல்லைப் பகுதிகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புவதை நிறுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கூட்டத்திற்கு பின் இரு தரப்பினரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இரு நாடுகளுக்கிடையே களத்தில் இருக்கும் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களையும் தவறான கருத்துக்களையும் தவிர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டன. மேலும், எல்லைக்கு கூடுதல் வீரர்களை அனுப்புவதையும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.