எல்லை விவகாரம் குறித்து ஆலோசிக்க இரு நாடுகளை சேர்ந்த உயர் மட்ட அலுவலர்கள் நேற்று (ஜூலை 10) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிழக்கு லடாக் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமது படைகளை முழுவதுமாக திரும்பபெற இந்தியா, சீனா ஒப்புக் கொண்டன. இரு நாட்டு எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான செயல் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது அவசியமாகிறது என அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரும், சீனா சார்பில் வெளியுறவு அமைச்சக எல்லை மற்றும் பெருங்கடல் துறையின் நிர்வாக இயக்குநரும் பேச்சுவார்த்தை கலந்து கொண்டனர்.
ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை மேற்கு எல்லை பகுதியில் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து இப்பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு உயர் மட்ட ராணுவ அலுவலர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது அவசியமாகிறது என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.