சண்டிகர்: ஹரியானா பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை சுயேச்சை எம்எல்ஏ சோம்பிர் சங்வான் வாபஸ் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஹரியானா மாநில சுயேச்சை எம்எல்ஏ சோம்பிர் சங்கான், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.
பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ! இது குறித்து மாநில அரசுக்கு அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், “விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக, ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுகிறேன். விவசாயிகளுக்கு எதிராக அரசுடன் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை.
ஹரியானா மாநில சுயேச்சை எம்எல்ஏ சோம்பிர் சங்கான் பேட்டி விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடே ஆதரவு தெரிவிக்கிறது. நாட்டு மக்கள் விவசாயிகளுடன் நிற்கின்றனர். எனது ராஜினாமா விவசாயிகளின் போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும். விவசாயிகளுக்கும் உத்வேகம் கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சில எம்எல்ஏக்களும் பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
டெல்லியில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குட் பட் லேட்'- விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய அசோக் கெலாட்!