கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் வேளையில் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் நேற்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், சீனாவை குற்றம் சொல்லும் எண்ணமில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், உலக சுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பங்கேற்ற ஜி20 உச்சி மாநாடு வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் 90 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் உலகமயமாதலின் தேவை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒன்றிணைந்த சர்வதேச அமைப்புகள், தற்போது சர்வதேச பொது சுகாதாரத்தில் உள்ள சவாலை சந்திக்கவுள்ளன. இந்த மாநாட்டில் பேசிய மோடி, 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, ஜி20 மாநாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் மீதே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. இந்தமுறை மனிதகுல முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவே அனைவரும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த தங்களது கருத்துகளை தயக்கமின்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர், கோவிட் 19 தொற்றால் நலிந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோவிட் 19 தொற்று சவாலானது, ஜி20 மாநாட்டுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் மனிதத்தின் மீது கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார்.
பிரதமர் மோடிக்கும், ஜி20 தலைவரான சவுதி அரேபிய இளவரருக்கும் இடையேயான உரையாடலின்போது இந்த மாநாடு திட்டமிடப்பட்டது. ரியாத்தில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள நேரடி ஜி20 மாநாடுக்கு முன்பாக மறுசீரமைப்பு பணிகளை தொடங்குவதற்கான தேவை குறித்து உலக தலைவர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடி, உலக ஜிடிபியில் 80 சதவிகிதத்தையும், உலக மக்கள் தொகையில் 60 சதவிகித்தையும் கொண்டுள்ள ஜி20 நாடுகளில்தான் 90 சதவிகித கரோனா வழக்குகளும், 88 சதவிகித மரணமும் நிகழ்ந்துள்ளதை குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில், கரோனா தொற்றை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்க உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட ஒப்புக்கொண்டனர். கோவிட் 19 தொற்றால் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எதிர்கொள்ள ஜி20 நாடுகள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளன. அதேபோல் கோவிட் 19 தொற்றுக்கு எதிரான உலக சுகாதார மையத்தின் முயற்சியில் தங்கள் பங்களிப்பு இருக்கும் என உலக தலைவர்கள் உறுதியளித்தனர்.