நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை நீக்க சட்டப்பேரவையில் திருத்தம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். பாட்னாவில் பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், "காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்திலேயே புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
சந்தைகள் அனைத்தையும் அழித்துவிட்டால், விவசாயிகள் எங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவார்கள் என்பதை பிரதமர் மோடியும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் தெளிவுப்படுத்த வேண்டும். இந்து, இஸ்லாமியர்களுக்கிடையே பிரச்னையை தூண்டி அதனை தேர்தல் விவகாரமாக மாற்ற பாஜக நினைக்கிறது.