காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
எனினும் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பல இடையூறுகளுக்கு பின் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அறிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இதை பெரிய சாதனையாக பேசி வந்தனர்.
இந்நிலையில் நேற்று செய்தியளார்களை சந்தித்த மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மூத்த தலைவருமான திக் விஜய் சிங் இதுகுறித்த தனது கருத்தை தெரிவித்தார்.
அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நட்பு கொண்டிருக்கும்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் என்ன பயன் என்று கூறினார். மேலும், தாவூத் இப்ராகிம், மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றார்.