தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முத்தலாக் சட்டம் - பெண் விடுதலைக்கான வழிமுறையா? மதவாதத்தின் உச்சமா? - முத்தலாக்

டெல்லி: இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை மீட்பதற்காக முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உண்மையில் அது பெண் விடுதலையின் திறவுகோளா அல்லது மதவாதத்தின் உச்சமா என்பதை பற்றிய தொகுப்பு.

Triple Talaq

By

Published : Jul 31, 2019, 5:47 PM IST

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் முத்தலாக் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் முத்தலாக் முறை முழுவதுமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தலாக் முறை ஏன் தடை செய்யப்பட வேண்டும், இதனை நிறைவேற்றிய பாஜக அரசுக்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா, முத்தலாக் மூலம் உண்மையில் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா என பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுகிறது. இதற்கான பதிலை ஒற்றை வரியில் அளிக்கமுடியாது. ஏனெனில், இந்த விவகாரம் மிகவும் சிக்கலானவை, மதம், உணர்வு, பாலின சமத்துவம் என அனைத்தும் இதில் அடங்கி இருக்கிறது.

முத்தலாக் முறை என்றால் என்ன?

இஸ்லாமிய சமூகத்தில் மூன்று விதமாக விவாகரத்து செய்யப்படும் நடைமுறை இருக்கிறது. அதில் அசன், ஹாசன் ஆகிய முறையில் விவாகரத்து திரும்பபெறப்படுவது வழக்கமாக இருக்கிறது. தலாக்-இ-பிடாட் (Talaq-e-biddat) எனப்படும் முத்தலாக் முறையில் விவாகரத்தை திரும்பப்பெறும் நடைமுறை இல்லை. இது பாவச் செயலாக கருதப்பட்டாலும், இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்டு வருகிறது. தலாக் முறைப்படி கணவன், தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், ஜமாத் என்ற கூட்டமைப்பை அனுகி தங்களின் கருத்துகளைக் கூறலாம். பின்னர், 40 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தலாக் எனக் கூறினால் விவாகரத்து முறை நிறைவடையும். ஆனால், சிலர் வெளிநாட்டில் இருந்தபடி மனைவிக்கு ஒரே கட்டமாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்தான் தலாக் முறை சர்ச்சைக்குள்ளானது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்திற்கு மேலான பெண்கள் இந்தியாவில் தங்களின் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கின்றனர். இதில், இரண்டு லட்சத்திற்கு மேலானவர்கள் இஸ்லாமிய பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தங்களின் கணவரிடம் இருந்து தானாக முன் வந்து தனியாக வாழ்கின்றார்களா அல்லது கட்டாயப்படுத்தி பிரித்துவைக்கப்பட்டார்களா என்ற தகவல் இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவில் இஸ்லாமிய சமூக ஆண்கள், தங்களின் மனைவியை முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் மூன்றாண்டு வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், அவை கிரிமினல் குற்றத்தின் கீழ் வரும்படி மசோதா இயற்றப்பட்டுள்ளது. இந்து சமூக ஆண்கள், தங்களின் மனைவியை உடனடி விவாகரத்து செய்தால் அது சிவில் குற்றமாகும். இப்படி பாரபட்சமாக இஸ்லாமிய சமூக ஆண்களுக்கு மட்டும் கிரிமினல் குற்றத்தின் கீழ் தண்டனை அளிக்கும்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைதான் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்த்தார்கள். மசோதாவில் திருத்தம் கொண்டு வர தேர்வுக் குழுவுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் அனைத்து கோரிக்கையும் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 402 தொகுதிகளில் 325 தொகுதிகளிலும், இப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 80 தொகுதிகளில் 64 தொகுதிகளிலும் வென்று பாஜக மிகப் பெரிய சாதனையை படைத்தது. 20 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழும் ஒரு மாநிலத்தில் பாஜக பெரும் வெற்றி பெறுவதற்கு இஸ்லாமிய வாக்குகளும் அவசியமானவை. எப்படி ஒரு பகுதி இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என பல தரப்பு கேள்வி எழுப்பியது. இதுகுறித்து லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் என்ற கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பு ஆய்வு செய்தது. இஸ்லாமிய பெண்களின் ஒரு பிரிவினர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இதற்கு முக்கிய காரணமாய் சொல்லப்படுவது இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு, முத்தலாக் மீதான வெறுப்பு. முத்தலாக் முறையால் பல இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனை எதிர்க்கும் விதமாகவே பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என அந்த கருத்து கணிப்பு எடுக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டது. எத்தனை விழுக்காடு இஸ்லாமிய பெண்கள் இந்த முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை என்ற போதிலும், அங்கும் இங்குமாய் பல பெண்கள் இந்த முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எகிப்து, பாகிஸ்தான், துனிசியா, பங்களாதேஷ், துருக்கி, இந்தோனேசியா, ஈராக், அல்ஜிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளே முத்தலாக் முறையை தடை செய்துள்ளது. பாலின சமத்துவத்துக்கு எதிரான எந்த முறையையும் உடைத்தெரிய வேண்டும், அதுவே வளர்ந்த முற்போக்கு சமூகத்தின் கடமையாகும். சபரிமலை பிரச்னையின் தீர்ப்பு பாலின சமுத்துவத்துக்கு எந்த அளவு முக்கியமோ, அதே அளவு இந்த பிரச்னையும் முக்கியம். முத்தலாக் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தமான, உடனடி விவாகரத்தை கிரிமினல் குற்றத்திற்கு கீழ் கொண்டு வருவதை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக ஆக்குவதே இதற்கு தீர்வாகும்.

ABOUT THE AUTHOR

...view details