குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும்போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு), என்.பி.ஆர். (தேசிய மக்கள் தொகை பதிவேடு) குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், ''தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை வைத்து மாநில அரசுகள் அரசியல் செய்ய வேண்டாம்.
பிரதமர் மோடி சொன்னது போல், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து இதுவரை அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கப்படவே இல்லை.
கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதலமைச்சர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்களின் அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காதீர்கள்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா நேர்காணல் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்போது சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதற்காக அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படாது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்பட மாட்டாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக பெறப்பட்ட தகவல்கள் எதுவும் குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்பட மாட்டாது. என்.ஆர்.சி.க்கு வேறு வழிமுறைகள் பின்பற்றப்படும்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தெளிவான விவரங்களை அரசு வெளியிடாமலிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டிலிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்'' என்றார்.