மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் இருந்து கோலாப்பூர் சென்றுகொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது.
சிக்கிக்கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பட்லாபூர், வங்கானி பகுதியில் சிக்கிக்கொண்ட இந்த ரயிலில், 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.
மீட்புப் பணியில் வீரர்கள்
இந்த தகவல் நாடு முழுவதும் பரவியதையடுத்து, ரயில்வே நிர்வாகமும், மகாராஷ்டிர மாநில அரசும் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. ரயில்வே பாதுகாப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, ரயிலில் சிக்கியிருந்த 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், கடும் மழை, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.