டெல்லி:மிதமானது முதல் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் உயிர் காக்க மட்டுமே பயன்படும், ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) வகையிலான டெக்ஸாமெதாசோன்(Dexamethasone) மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மிதமானது முதல் மோசமான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மெதில்பிரட்னிசோலன் மருந்து தரப்படுகிறது. அதற்கு மாற்றாக டெக்ஸாமெதாசோன் மருந்தை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் கிடைத்த பல்வேறு ஆதாரங்கள், மருத்துவ நிபுணர்களுடனான கலந்தாய்வுகள் ஆகியவை மேற்கொண்டபின் டெக்ஸாமெதாசோன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிட்-19 சிகிச்சை முறையில் திருத்தம் செய்து வெளியிட்ட அறிவிப்பில், 'டெக்சாமெதாசோன் மருந்து ஏற்கெனவே நடைமுறையில் நுரையீரல் தொற்றுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் எதிர்ப்பு அழற்சி, நோய் எதிர்ப்பு தடுப்பு விளைவுகள் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை தற்போது கரோனா நோயாளிகளில் மிதமானது முதல் மோசமான நிலையில் இருப்போருக்கு மாற்றாக, பயன்படுத்தலாம்.
மிதமான அல்லது மோசமான நிலைியல் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மெதில்பிரட்னிசோலன் 0.5 முதல் 1 மில்லிகிராம் அல்லது டெக்ஸாமெதாசோன் 0.1 முதல் 0.2 மில்லிகிராம்வரை மூன்று நாட்களுக்கு வழங்கலாம். அதிலும் அந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவது அதிகரிக்கும்பட்சத்தில், அழற்சி குறியீடு உடலில் தென்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 48 மணிநேரத்துக்குள் வழங்கலாம். இருப்பினும், நோயாளியின் உடல்நலனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, கரோனா சிகிச்சைக்கான வழிகாட்டலில் மாற்றத்தை மத்திய சுகாதாரத்துறை செய்துள்ளது.
ஜூன் 13ஆம் தேதி ஆன்டி-வைரல் மருந்தான ரெம்டெசிவர் கலவையான, கோபிஃபார் மருந்தை பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதித்தது. ஏற்கெனவே ரெம்டெசிவர் மருந்தும் கரோனா சிகிச்சையில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தொடக்கத்தில் மலேரியா நோய்த்தடுப்பு மாத்திரையான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவித்திருந்தது. பின்னர் அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்தி, ஆபத்தான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது, தொடக்க நிலையில் இருப்போருக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்கலாம் என மாற்றியது.
டெக்ஸாமெதாசோன் மருந்தை லண்டன் மருத்துவர்கள் சமீபத்தில் கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தியபோது, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பு, ஐந்தில் ஒரு பங்காக குறைகிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே, இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் எனத் தெரிவித்தனர்.