மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 10ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது சாலையின் ஓரங்களில் தங்கி தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலும் சுமுகமான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை சுமித் துல் என்பவர் தனது ஆதரவினை புதுவிதமாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது மாப்பிள்ளை ஊர்வலத்தில் காருக்குப் பதிலாக டிராக்டரில் சென்று அவருடைய மாநிலத்திற்கு தனது ஆதரவான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஊர்வலம் கர்னல் நகரத்தில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டிலிருந்து தொடங்கியது. ஊர்வலத்திற்காக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மெர்சிடிஸ் காரை வீட்டிலேயே விட்டுவிட்டு புதுமாப்பிள்ளை டிராக்டரில் வந்துள்ளார்.