ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.
ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தினமும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.