குடியுரிமை மசோசதாவுக்கு எதிராக மும்பையில் இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையில் 'காந்தி சாந்தி யாத்ரா' என்ற பெயரில் அமைதி பேரணி நடைபெற்றது.
இதை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவைத் தொடங்கிவைத்து பேசிய சரத் பவார், மத்திய அரசு மக்களுக்கு எதிராக சர்வாதிகார நடவடிக்கைகளை ஏவிவருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு காந்தியின் அகிம்சை வழியில் நாம் பதிலடி தரவேண்டும் எனவும் கூறினார்.
குடியுரிமை சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவருவதாக வருத்தம் தெரிவித்த சரத் பவார், மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தவே தெருக்களில் இறங்கி போராடுவதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ஜே.என்.யுவில் மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் மொத்தமாக 3 ஆயிரம் கி.மீ தூரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோனியை சந்தித்த அஜய் தேவ்கன்: கிரிக்கெட்-சினிமா இந்தியாவை இணைக்கும் சக்தி