இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து முறையை ஒழிப்பதற்கான 'முத்தலாக் தடை மசோதா 2019' இன்று மக்களவையில் மீண்டும் புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைந்த முந்தைய அரசால் செப்டம்பர் 2018, பிப்ரவரி 2019 என இருமுறை முத்தலாக் தடை மசோதா அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவைில் நிறைவேற்ற முடியாமல் இருந்தது.
சிறப்பு திருமண உரிமைச் சட்டத்தின்படி இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக மூன்று முறை தலாக் கூறுவதை தடை செய்யும் விதமாக, இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டப்படிதான் விவகாரத்து பெறவேண்டும் எனவும், அப்படியில்லாமல் மனைவியிடம் மூன்று முறை தலாக்கை கூறி விவகாரத்துப் பெற நினைத்தால், அந்த நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், பாதுகாப்பிற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு, அமைச்சரவையில் 2018 ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் பிணை வேண்டும் என்று நினைத்தால் நீதிமன்றத்திற்கு வழக்கு வரும்முன்பே பிணை வழங்க அனுமதி கோரலாம். பெயிலில் வரமுடியாதவர்கள், காவல் நிலையத்தில் ஜாமீன் பெற முடியாது. எனவே நீதிபதிகளிடம் கேட்டு, மனைவியின் அனுமதியுடன் பிணை பெறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறுகிறது.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நேற்று 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்திற்குப் பின்னர் அது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதா, கூட்டத்தொடர் தொடங்கிய 45 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.