சென்னை: சாலைப் பாதுகாப்பிற்கான தரவு சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்க சென்னை ஐஐடியுடன் ராஜஸ்தான் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சாலைகளில் ஏற்படும் விபத்துகளினால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் இறக்க நேரிடுகின்றன. இதனை ஒழுங்குப்படுத்தி, இறப்புகளைக் குறைக்கும் நோக்கில், சென்னை ஐஐடியுடன், ராஜஸ்தான் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம், பொதுப்பணித் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் தரவுகளைக் கட்டமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்துத் துறைகளிலிருந்தும் தரவுகள் திரட்டப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்படும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்கள் மூலம், சாலைப் பாதுகாப்பைச் சூழலுக்கு ஏற்ப மேம்படுத்த அரசு திட்டமிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையைப் பின்பற்றி, 2030ஆம் ஆண்டிற்குள் சாலை இறப்புகளை 50 விழுக்காடு அளவு குறைக்க ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு சாலை விபத்தினால் ஏற்படும் இறப்புகளை முற்றிலுமாகத் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.