டெல்லி:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17 நாள்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் நோக்கிலேயே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. விவசாயிகளையும் விவசாயத் துறையையும் மேலும் வளமாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடரின்போது இயற்றப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி விவசாயிகள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவே அரசு இந்த சட்டங்களை நிறைவேற்றியது.
2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் நோக்கம். விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்த புதிய திட்டங்கள் மூலம் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நிதி விநியோகித்துள்ளது.
விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்துதல், புதிய தலைமுறையினரை விவசாயத்தை நோக்கி ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த சட்டம் வழிவகுக்கும். விவசாயிகள் பல ஆண்டுகளாக நாட்டின் பலமாக இருந்தனர். கிராமங்களில் விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழும் விவசாய உள்கட்டமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குளிர் சேமிப்பு, கிடங்குகள், தரம் மற்றும் பேக்கேஜிங் பிரிவுகளை நிறுவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும் உணவு பதப்படுத்தும் துறையிலும் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார். மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு நியாயமான விலையைப் பெறுவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதானிகளுக்கும், அம்பானிகளுக்குமான வேளாண் சட்டம் - ராகுல் காந்தி