டெல்லி:கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலி மட்டும்தான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, அதன் செயல்பாடுகள் 2007ஆம் ஆண்டின் கடன் மற்றும் தீர்வு முறை சட்டத்தை மீறவில்லை என்று ரிசர்வ் வங்கி, தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வில் தெரிவித்துள்ளது.
கூகுள் பே எந்தவொரு கட்டண முறைகளையும் கையாளாததால், என்.பி.சி.ஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு ஆபரேட்டர்கள் பட்டியலில் இந்நிறுவனம் இடம் பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே அல்லது ஜி பே. வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய வேண்டியதில்லை, வரிசை இல்லை, செயலி மூலம் அனுப்பிய பணம் நேரடியாக வங்கிக் கணக்கை சேரும் வசதி எனப் பல வசதிகளைக் கொண்டு, மக்களின் உற்ற நண்பனாகிப்போனது கூகுள் பே செயலி. 5 ரூபாய்க்கும் பொருட்களை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் கூகுள் பே உள்ளதா என்று கேட்கும் மனநிலை மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி இல்லை. இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை. செயலில் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்ளிட்ட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என்பது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன், அனூப் பாம்பணி அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் முறைப்படுத்தும் அமைப்பான ஆர்பிஐ-இடம் அனுமதி வாங்காமல், அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவையை எவ்வாறு செயல்படுத்தமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.