கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறையினர், அதிலிருந்த 30 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தங்கக் கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை என்ஐஏ அலுவலர்கள் கைதுசெய்தனர். அதேபோல இதில் மூன்றாவது குற்றவாளியான பைசல் ஃபரீத்துக்கும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கையில், திருவனந்தபுரத்திலுள்ள பெடரல் வங்கியின் கிளையில் ஸ்வப்னாவின் லாக்கரிலிருந்து 36.5 லட்சம் ரூபாயும், எஸ்பிஐ வங்கியிலுள்ள லாக்கரிலிருந்து 64 லட்சம் ரூபாய் மற்றும் 982.5 கிராம் தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.