மகாவீரர், புத்தர், சந்திரகுப்த மௌரியர் போன்ற அரசர்கள் தாங்கள் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தைத் துறந்து ஆண்டியான கதைகளை நாம் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால், ஆண்டி ஒருவர் தனி ராஜ்ஜியத்தை விலைக்கு வாங்கி அதற்குக் கொடி, பாஸ்போர்ட், மந்திரி சபை அமைத்துள்ள வரலாற்று நகைமுரண் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசர்கள் துறவறம் கண்டு ஆன்மிக வழி சென்ற காலம் தலைகீழாகி, ஆண்டி கோலத்தில் தன்னை துறவியென்று சொல்லிக்கொண்டு திரியும் ஒருவர் நாடாளும் அரசனாக உருமாறியுள்ளார்.
அவர் தான் நித்தியானந்தா. பெயருக்குத் தகுந்தாற்போல் முகத்தில் புன்னகைப் பூத்திருக்கத் தன்னை ஆனந்தமாய் காட்டிக்கொள்வார் நித்தி. தான் பெற்ற இன்பத்தை வையகத்துக்கும் கொடுக்கும்விதமாக அடிக்கடி காணொலிகளை இணையத்தில் பதிவிட்டுக் காண்போரை மகிழச் செய்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார் இவர். 'நான் சிவபெருமானின் அவதாரம்' என ஒரு முறை, 'நான் ஒரு புறம்போக்கு' என மறுமுறை, இப்படி அசரவைக்கும்படி மாறி மாறி பேசும் நித்தியைப் பார்ப்பவர்கள் பலருக்கும், ஏதோ வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிற சாமியார் இந்தாளு எனத் தோன்றுவது வாடிக்கை. ஆனால் உண்மையில், தனது பக்தர்கள், பொதுமக்கள், அரசு என்று அனைவரையும் முட்டாள்களாக்கி, இந்த சாமியார் ஒரு சாம்ராஜ்ஜித்தையே உருவாக்கியுள்ளார்.
'நித்தியானந்தா தியான பீடம்' என்ற பெயரில் நாடுமுழுவதும் ஆசிரமம் நடத்தி வந்தாலும், பல்வேறு வார இதழ்களுக்கு ஆன்மிகத் தொடர் கட்டுரைகள் எழுதியதன் மூலமே வெகுஜன நீரோட்டத்தில் தன்னை மெல்ல நுழைத்துக் கொண்டார் நித்தியானந்தா. 2010ஆம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்றின் மூலம், ஒரே நாளில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரபலமாக உருவெடுத்தார் நித்தி. ஒரு ஆன்மிகவாதி இது போன்ற சர்ச்சையில் சிக்கினால், அவரின் கதை அத்தோடு முடிந்தது என்றுதானே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும். ஆனால் அதன் பின்னர்தான் நித்தியின் களி ஆட்டங்கள் வேறு விதமாகப் பரிணமித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
சூரியனைத் தாமதமாக உதிக்க வைப்பது, சிவன், பராசக்தி, கால பைரவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவது, ஐன்ஸ்டீனின் 'ரிலேட்டிவிட்டி தியரி'க்கு ஐன்ஸ்டீனே ஆடிப்போகும் விதமான விளக்கங்களை அளிப்பது, சிவதாண்டவமாடி கை கால்களை உருட்டி ஜி.எப்.எக்ஃஸ் காட்சிகளில் புகை வரவழைப்பது போன்ற சேட்டைகளைத் திரைக்கு முன் செய்யும் நித்தியின் மீது, திரை மறைவில் செய்ததாக 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இதுவரை பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்புணர்வு, ஆள்கடத்தல், குழந்தைகளைத் தொழிலாளர்களாக்கி வதைத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களை தன்பெயரில் கொண்டுள்ளார் நித்தியானந்தா. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊடகங்களுக்குத் தீனியாக இருந்த நித்தி, அடுத்த பத்தாண்டுக்குள் கர்நாடகா, கேரளா, குஜராத், ஹிமாச்சலம் என இந்தியாவின் பல்வேறு மாநில போலீஸார் தேடும் கிரிமினல் சாமியாக உச்சம் தொட்டு சர்வதேச ஊடகங்களுக்குத் தீனி போடும் பிரபலமாகப் பரிணமித்துள்ளார்.