கோவிட்-19 தொற்று முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 2 லட்சத்து 84 ஆயிரத்து 441 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 91 லட்சத்து 87 ஆயிரத்து 943ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 6,565 பேர் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 58 ஆயிரத்து 173 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 1,243 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 537 பேருக்கு கோவிட்-19 கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612ஆக உயர்ந்துள்ளது. மேலும், 933 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.