பெங்களூரு: உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் பணியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 5 லட்சம் தொண்டர்கள் கர்நாடகத்தில் ஈடுபடுவார்கள் என அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்தார்.
விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டும் வகையில் நாங்கள் ஒரு குழுவை அமைக்க உள்ளோம்.
அந்தக் குழுவில் 5 லட்சம் தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் மாநிலத்தில் 27 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு செல்வார்கள். அங்கு ஒரு கோடி பக்தர்களை சந்தித்து நிதி திரட்டுவார்கள்.
இந்த நிதி சேகரிப்பு இயக்கத்தை மேற்பார்வையிட மாநிலத்தில் ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பன் அபியான் சமிதி என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் ரூ.10, ரூ.100, ரூ.1000 என டோக்கன் வழங்கப்பட்டு நிதி சேகரிக்கப்படும்.
ரூ.2,000 க்கும் மேல் நன்கொடை அளிப்பவர்களுக்கு ரசீது அளிக்கப்படும். இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80ஜி கீழ் விலக்கு அளிக்கப்படும்.