நாடாளுமன்றத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் (Cooch Behar) பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
சாரதா சிட்ஸ் ஊழல், ரோஸ் வேலி ஊழல், நாரதா ஊழல் என பல்வேறு ஊழல்களால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டை கெடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் இந்த சௌக்கிதார் (காவல்காரன்) கேள்வி கேட்பான் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலுள்ள செல்போன் அழைப்புகள் அனைத்தும் விரைவில் இலவசமாகும், இணைய கட்டணம் உலகிலேயே குறைவான அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போது எல்லா ஏழைகளிடமும் வங்கிக்கணக்கு உள்ளதாக கூறிய மோடி, ஐந்து வருடங்களுக்கு முன் சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்டதை மோடி அரசு செய்து முடித்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
இலவச செல்போன் அழைப்புகள் தொடர்பாக பாஜக இதுவரை வாக்குறுதி ஏதும் வழங்கவில்லை. வருங்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மனதில் கொண்டு மோடி இவ்வாறு பேசியதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதையே தனது கதாநாயகன் எனக்கூறி வருகிறது. ஆனால் தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் தனது அறிக்கையை வெளியிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்று எண்ணத்துடன் பாஜக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் பாஜக விரைவில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, தன்னை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்று கூறினார். அங்குள்ள இடதுசாரிகளையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.